


முழு முதற் கடவுளான விநாயகப் பெருமான், மூன்று திசைகளை நோக்கிய மூன்று முகங்களுடன் பாலகன் வடிவத்தில், தன் தாமரை உள் பாதங்களை விரித்து அமர்ந்திருக்கும் அழகான திருக்கோலம்.
ஆன்மீகத்தில் மூன்று என்பது எண்ணற்ற விஷயங்களைக் குறிக்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தாலும், இவர் முப்பெரும் தேவியரோடு இணைந்த மும்மூர்த்திகளின் சொரூபத்தையும், மூன்று காலங்களையும், மூன்று சக்திகளையும் தன்னகத்தே கொண்டவர். சங்கடங்களைத் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் தொடர்ந்து ஆறு வாரங்கள் மாதுளம்பழம் மாலை அணிவித்து பூஜை செய்து வேண்டிக்கொள்ளும் போது, சந்தான பாக்கியம் கிட்டும் என்பது இவரின் தனிச்சிறப்பு ஆகும்.
நவதுர்க்கையின் அம்சமாக விளங்குபவள் தான் பாலாம்பிகை என நம்மால் அன்போடு அழைக்கப்படும் பாலா திரிபுரசுந்தரி. ஐந்து வயது குழந்தையின் அம்சமாக அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கும் இவளின் தோற்றம் அழகானது.
பெண் என்பவள் சக்தியின் உறைவிடம். எந்த நிலையிலும் அவளின் சக்தி அளப்பரியது என்பதை இவளின் அவதார நோக்கமே நமக்கு உணர்த்தும்.
அடம்பிடிக்கும் குழந்தை உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் மட்டுமே கட்டுப்படும். அதற்கேற்றாற்போல, தன் பக்தர்கள் உண்மையான அன்போடு, தன்னை ஒரு குழந்தையாகப் பாவித்து கொடுக்கும் இனிப்புகளையும், பள்ளிப் பருவத்தின் பொருட்டு அவர்கள் கொடுக்கும் கல்விச் சாதனங்களையும் அன்போடு ஏற்றுக் கொள்கிறாள். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், ஞானத்தில் திளைக்கவும் தன் அருளை வாரி வழங்கும் வள்ளல் இவள் தான்.
பாலாவைப் போன்றே தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என வேண்டுவோருக்கு , அவளே குழந்தையாகப் பிறப்பது இவளின் தனிச்சிறப்பாகும்.
அனைத்து சேனைகளுக்கும் அதிபதியாக இருந்தாலும், ஆதி சித்தன் என ஆன்மிக அன்பர்களால் அன்போடு அழைக்கப்படும் முருகனின் அழகான தோற்றம். ஞானம் வேண்டுவோருக்கு தியான நிலையில் அருள் பாலிக்கும் அழகன்.
இளைஞர் பருவத்தில் வரும் கவனச் சிதறல்கள்தான் நம் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையும். அதனால் ஏற்படும் மனப்போராட்டத்திற்கு கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்தும் சேனாதிபதி தான் இவர்.
ஆன்மீக முன்னேற்றம் வேண்டுவோருக்கு, ஆழ்ந்த தியானமே வழி என உணர்த்தினாலும், பித்தனையும் சித்தனாக மாற்றி பேரருள் புரிபவன்தான் ஆதி சித்தன்.
இங்கு ஹரிஹர நந்தினி திருக்கோலத்தில், திருமால் தன் இடப்பாகத்தில், அன்னை நந்தினியை அணைத்தபடி, இருவரின் கைகளும் கால்களும் ஒன்றிணைந்து அமர்ந்து அருள் பாலிக்கும் மிக அற்புதமான அழகான தோற்றத்தில் காட்சி கொடுக்கிறார்.
திருமணம் என்பது வெறும் ஆண் பெண் சேர்க்கை அல்ல; அது இரு சக்திகளின் திவ்யமான சங்கமம் ஆகும். இந்தச் சக்திகளின் நிலையானது – ஒன்று மற்றொன்றை விடத் தாழ்ந்து இருந்தாலோ, உயர்ந்து இருந்தாலோ அல்லது ஒன்றை மற்றொன்று அடக்கி ஆள முற்பட்டாலோ – சமநிலை தவறிவிடும். திருமண உறவும் இந்தச் சமநிலையின் முக்கியத்துவத்தையே குறிக்கிறது. இருவரும் மனமொத்து, ஒன்றிணைந்து பயணிக்கும் வாழ்க்கையே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அந்த மனமொத்த தம்பதியரின் இலக்கணமாகவே இங்கு ஹரிஹர நந்தினி அருள் பாலிக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து மனம் ஒன்றி வணங்கி வரும்போது, திருமணத்தடை நீங்குவது மற்றும் திருமண வாழ்வில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து நல்வாழ்வு அமைவது இவர்களின் தனிச்சிறப்பு ஆகும்.
Need assistance? We're here to help with support, guidance, and resources. Reach out to us anytime.
Visit Shri Muthappar Karuppaswami Temple and experience the divine blessings and spiritual peace yourself
Copyright 2025 Shri Muthappar KaruppaSwami Temple. All Rights Reserved.